GK & Current Affairs in Tamil!

QUIZ

அனைத்து நடப்பு செய்திகள் பணிபுரிய சிறந்த ஐடி நிறுவனங்கள் பட்டியலில் அடோப், கூகுள், மைக்ரோசாப்ட் | 18-Sep-2016 20:55

ஐடி மற்றும் ஐடிஇஎஸ் துறையில் பணிபுரிய சிறந்த 50 நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் நடைமுறைகள் மற்றும் பணியாளர்களின் மதிப்பீடுகளை வைத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. `கிரேட் பிளேஸ் டு வொர்க் இன்ஸ்டியூட் இந்தியா’ இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ள நிறுவனங்களில் 47 சதவீத நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் (எம்என்சி) ஆகும். அடோப் இந்தியா, கூகுள் இந்தியா மற்றும் மைக்ரோசாப்ட் இந்தியா ஆகியவை முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளன.

குளோபல் அனல்டிக்ஸ் இந்தியா, ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜீஸ், ஹிட்டாச்சி டேட்டா சிஸ்டம்ஸ், நெட் ஆப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த பட்டியலில் உள்ளன. தவிர எஸ்ஏபி இந்தியா, இன்டெல் இந் தியா, பேபால் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் உள்ளன.

சலுகைகள், வேலை-குடும்ப சமன்பாடு, லாபத்தை பிரித்து கொடுத்தல் ஆகிய பிரிவுகளில் இந்திய நிறுவனங்களை விட பன்னாட்டு நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன.

ஐந்து வருடங்களுக்குள் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணிபுரியும் இடங்களில் கொண்டாட்டம், தவறுகளை பொறுத்துக்கொள்ளுதல், எளிதாக தலைமையை அணுகுதல் ஆகிய பிரிவில் முன்னிலையில் உள்ளன.

பணிபுரிய சிறந்த நிறுவனங்களில் 24 சதவீத நிறுவனங்கள் பெங்களூருவில் உள்ளன. சிஸ்கோ, ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ், சேல்ஸ்போர்ஸ் மற்றும் இஎம்சி இந்தியா ஆகிய நிறுவனங்கள் உள்ளன. 145 நிறுவனங்களில் 36,500 நபர்களின் கருத்துகளை வைத்து முதல் 50 நிறுவனங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

உர்ஜித் படேல் கையெழுத்தில் புதிய 20 ரூபாய் நோட்டுகள் | 18-Sep-2016 20:52

புதிதாக ரிசர்வ் வங்கி கவர்னராகப் பொறுப்பேற்றுள்ள உர்ஜித் படேல் கையெழுத்தில் புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியாக உள்ளன.

மகாத்மா காந்தி சீரிஸ் 2005-ல் வெளியான நோட்டுகளில் ஆர் என்ற எழுத்து நம்பர் பேனலில் இடம்பெற்றிருக்கும். இதன் பின்பகுதியில் 2016 என்று அச்சாகும். வழக்கமான வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாக இந்த ரூபாய் நோட்டுகள் இருக்கும். சிறிய அளவிலான மாறுதல்கள் இதில் இடம்பெற்றிருக்கும்.

20 எண், ஆர்பிஐ முத்திரை, மகாத்மா காந்தி உருவம், உத்திர வாத பிரிவு, கவர்னரின் கையெழுத்து என்பன வழக்கமாக நோட்டுகளில் சற்று உயர்ந்த அளவினதாக இருக்கும். ஆனால் புதிய நோட்டுகளில் இவை வழக்கமானதாக இருக்கும். ரூபாய் நோட்டின் முக்கோண வடிவிலான அடையாள சின்னம் இந்த புதிய ரூபாய் நோட்டில் நீக்கப்பட்டிருக்கும். இருப்பினும் நிறத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

அந்நிய மறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி: ஐஆர்டிஏ தலைவர் விஜயன் தகவல் | 18-Sep-2016 20:50

சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள மறு காப்பீட்டு நிறுவனங்கள் விரைவில் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளைத் தொடங்க உள்ளன என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐஆர்டிஏ) தலைவர் விஜயன் கூறினார்.

தற்போது இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான ஜிஐசி நிறுவனம் மட்டுமே மறு காப்பீட்டு பணிகளை மேற்கொள்கிறது.

சர்வதேச அளவில் மூனிச் ஆர்இ, ஸ்விஸ் ஆர்இ, ஸ்கோர், ஹனோவர் ஆர் உள்ளிட்ட நிறுவனங்கள் மறு காப்பீட்டில் ஈடுபட்டுள்ள பிரபலமான நிறுவனங்களாகும். பொது வாக அந்நிய காப்பீட்டு நிறுவனங்கள் இங்கு செயல்பாடுகளைத்தொடங்க ஆர்1 லைசென்ஸ் பெற வேண்டும். அடுத்த கட்டமாக ஆர்2 மற்றும் ஆர்3 லைசென்ஸ்களைப் பெற வேண்டும்.

மூன்று கட்ட லைசென்ஸைப் பெற்ற பிறகுதான் அந்நிய மறு காப்பீட்டு நிறுவனங்கள் இங்கு கிளைகளைத் தொடங்க முடியும். இது தொடர்பாக சில நிறுவனங்கள் ஐஆர்டிஏவை அணுகியுள்ளதாக விஜயன் குறிப்பிட்டார்.

குறைந்தபட்சம் 6 நிறுவனங்கள் இங்கு கிளைகள் தொடங்க அனுமதி கோரியுள்ளன. அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனுமதி பெற்று அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கு கிளைகளை அமைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐஆர்டிஏ இயக்குநர் கூட்டத்தில் இந்நிறுவனங்களுக்கு ஆர்2 அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டு வழங்கப்படும் என்றார்.

இது தொடர்பான வரைவு அறிக்கை தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நிறுவனங்கள் இது தொடர்பான அறிக்கையை பார்க்க வேண்டும் என வற்புறுத்துகின்றன. இது தொடர்பாக இறுதி அறிக்கை தயாரிக்கும் நிலையை எட்டவில்லை என்றார்.

பொது காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் அவைகளைப் பட்டியலிடலாம் என அரசு அறிவித்துவிட்டது. ஆனால் இது தொடர்பாக எவ்வித அதிகாரபூர்வ ஆணையும் வெளியாகவில்லை என்றார் விஜயன்.

இந்திய பணியாளர்களில் 34 சதவீதம் பேர் திறமையற்றவர்கள் | 18-Sep-2016 20:47

இந்திய பணியாளர்களில் 34 சதவீதம் பேர் திறமையில்லாதவர்களாக இருக்கின்றனர் என்று சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. இது சீனாவில் 47 சதவீதமாக இருக்கிறது.

பிஎன்பி மெட்லைப் பணியாளர் நலன் குறித்த ஆய்வை வெளியிட்டுள்ளது. ஆறு நாடுகளில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்து பிஎன்பி மெட்லைப் அறிக்கை வெளியிட்டுள்ளது. 34 சதவீத இந்திய பணியாளர்கள் திறமை குறைவாக இருப்பதாக நம்புகிறார்கள். இது போலாந்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 40 சதவீதமாகவும் சீனாவில் 47 சதவீதமாகவும் உள்ளது. ரஷ்யாவில் 56 சதவீதம் பேர் திறமை குறைவாக உள்ளார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் பணியாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்கும் கவர்ந்து இழுப்பதற்கும் சம்பளம் மற்றும் சலுகைகளில் அதிகம் கவனம் செலுத்தும். தற்போது பணியாளர்களை தக்கவைத்துக் கொள்ள வெறும் சம்பளம் மட்டுமல்லாமல் சிறப்புச் சலுகைகளை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

மற்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக பணியாளர்களை ஈர்க்க சலுகைகளை வழங்குகிறார்கள் என்று ஆய்வில் கலந்து கொண்ட 88 சதவீத இந்திய பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மிகப் பெரும்பான்மையான எம்என்சி நிறுவனங்கள் மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்றவற்றை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பணியாளர்களுக்கு சலுகைகளை வழங்கவேண்டியது அதிகரித்து வருகிறது. மிகச் சிறிய நிறுவனங்களும் திறமையானவர்களை பணியில் தக்கவைத்துக் கொள்வதற்கு வரக்கூடிய வருடங்களில் சலுகைகளை வழங்க வேண்டி வரும். உடல்நலம் சார்ந்த சலுகைகள், ஓய்வுகால சலுகைகள் மற்றும் நிதி சார்ந்த திட்டங்கள் போன்றவை இந்த சலுகைகளில் முக்கிய பங்கு வகிக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் 20,000 கி.மீ. புல்லட் ரயில் பாதை: உலகிலேயே மிகவும் நீளமானது | 18-Sep-2016 20:43

உலகிலேயே நீளமான அதிவேக ரயில் (புல்லட்) பாதைகளைக் கொண்ட நாடாக சீனா உருவெடுத்துள்ளது. அந்நாட்டில் உள்ள புல்லட் ரயில் பாதையின் நீளம் 20 ஆயிரம் கிலோ மீட்டரைத் தாண்டியது

நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தின் ஜெங்சூ நகரையும் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் சுசூ நகரையும் இணைக்கும் வகையில் புதிய பாதை அமைக்கப்பட்டது. இது நேற்று பயன்பாட்டுக்கு வந்தது.

360 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாதை, மிக முக்கியமான வடக்கு-தெற்கு பாதைகளை இணைக்கிறது. இதன்மூலம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கிடையிலான பயண நேரம் கணிசமாகக் குறைகிறது.

குறிப்பாக, ஜியான் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 11 மணியிலிருந்து 6 மணியாகக் குறையும். மொத்தம் 9 ரயில் நிலையங்களைக் கொண்ட இந்த வழித்தடத்தில் மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ரயில் செல்லும்.

இதன்மூலம், சீனாவில் உள்ள அதிவேக ரயில் பாதையின் மொத்த நீளம் 20 ஆயிரம் கிலோ மீட்டரைத் தாண்டி உள்ளது. இதனால் உலகின் நீளமான அதிவேக ரயில் பாதையைக் கொண்ட நாடு என்ற பெருமை சீனாவுக்கு கிடைத்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதிவேக ரயில்பாதை அமைப்பதற்கான பணி ஒப்பந்தங்களைப் பெற ஜப்பான், சீனா இடையே போட்டி நிலவுகிறது. மும்பை - அகமதாபாத் இடையிலான அதிவேக ரயில் பாதைக்கான ஒப்பந்தம் ஜப்பானுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை, டெல்லி இடையே அதிவேக ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சீனா ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் நீதிபதியாக நியமனம் | 18-Sep-2016 20:38

அமெரிக்காவின் நியூயார்க் மாவட்ட நீதிபதிகளில் ஒருவராக 47 வயது இந்திய வம்சாவளி பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

டயானி குஜராத்தி என்ற இவர், நியூயார்க் தெற்கு மாவட்ட அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில், கிரிமினல் வழக்கு பிரிவின் துணைத் தலைவராக கடந்த 2012 முதல் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில், “அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்ற அமர்வில் நீதிபதியாக பணியாற்ற டயானி குஜராத்தியை நியமித்துள்ளேன். அமெரிக்க மக்களுக்கு மிகச்சிறந்த முறையில் இவர் பணியாற்றுவார் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். செனட் அவையின் ஒப்புதலுக்குப் பிறகு இவர் நீதிபதியாக பொறுப்பேற்பார்.

டயானியின் தந்தை தமோதர் எம் குஜராத்தி, அமெரிக்க ராணுவ அகாடமியில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றுகிறார். பாம்பே பல்கலைக்கழகத்தில் 1960-ல் எம்.காம் முடித்த தாமோதர், 1965-ல் சிகாகா பல்கலை.யில் பிஎச்.டி முடித்தார்.




QUIZ

தற்போதைய நிகழ்வுகள்