GK & Current Affairs in Tamil!

QUIZ

அனைத்து நடப்பு செய்திகள் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் | 13-Sep-2016 18:40

பிரேசிலின் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். பிரேசிலின் ரியோவில் ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் பெண்கள் குண்டு எறிதலில் இந்தியாவின் தீபா மாலிக் எப்.53 பிரிவில் பங்கேற்றார். இதில் 4.61 மீ., தூரம் வீசிய தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன்மூலம் பாராஒலிம்பிக் போட்டிகள் பதக்கம் வென்ற முதல் இந்தீய வீராங்கனை என்ற பெருமை பெற்றார் தீபா மாலிக்.

நிதியமைச்சர் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்! | 13-Sep-2016 18:26

அண்மையில் நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜி.எஸ்.டி  கவுன்சில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதலை அளித்துள்ளது.

நாடெங்கும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை கொண்டுவரும் பொருட்டு \'பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மசோதா\' அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஜனாதிபதி பிரணாபிடம் இந்த மசோதா ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.  அவரும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மறைமுக வரிவிதிப்பு அளவு மற்றும் ஜி.எஸ்.டி-ஐ அமல் செய்வதில் உள்ள  பிரச்சினைகளை களையும் பொருட்டு ஜி.எஸ்.டி  கவுன்சில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த கவுன்சில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பும் அரசு கெசட்டில் வெளியிடப்பட்டது.

அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் மத்திய அரசின் செய்தி தொடர்பாளர் பிராங் நொரோன்ஹா  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த ஜி.எஸ்.டி கவுன்சிலில் மத்திய நிதி அமைச்சர், மத்திய வருவாய் துறை இணை அமைச்சர் மற்றும் மாநில நிதியமைச்சர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். சுருக்கமாக கூறுவதானால் மாநில நிதியமைச்சர்களின் உயர்மட்டக் குழு இந்த கவுன்சிலுக்கு உதவி புரியும்.

தில்லியில் செப். 14-இல் இந்திய-அமெரிக்க பொருளாதார உச்சி மாநாடு | 13-Sep-2016 18:20

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றை மேம்படுத்த தில்லியில் வரும் 14-ஆம் தேதி பொருளாதார உச்சி மாநாடு தொடங்குகிறது. இதுகுறித்து இந்திய- அமெரிக்க வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவிக்கையில், \"இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கிடையே ஏற்கெனவே உள்ள இருதரப்பு வர்த்தகத்தை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 33 லட்சம் கோடிக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அத்துடன் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டிய துறைகளில் கவனம் செலுத்தப்படும்\' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய- அமெரிக்க வர்த்தகக் கூட்டமைப்பின் வடக்கு இந்திய கவுன்சிலால் நடத்தப்படும் இந்த இரண்டு நாள் உச்சி மாநாட்டை இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு வர்மா தொடங்கி வைக்கிறார்.மத்திய அமைச்சர்களான வெங்கய்ய நாயுடு, ஹர்சிம்ரத் கெளர் பாதல், இரு நாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

டால்கோ ரயில்: தில்லி - மும்பை 12 மணி நேர பயணம் | 13-Sep-2016 18:16

ஸ்பெயின் தயாரிப்பான \"டால்கோ\' அதிவேக ரயிலின் இறுதி சோதனை ஓட்டம், தில்லி - மும்பை இடையே நடைபெற்றது. தில்லியிலிருந்து மணிக்கு சுமார் 150 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட \"டால்கோ\' ரயில், 12 மணி நேரத்துக்கு முன்பாகவே மும்பையை அடைந்தது. இந்த ரயிலின் முதல் சோதனை ஓட்டம், உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி - மொராதாபாத் இடையே நடைபெற்றது. பின்னர், பல்வல்-மதுரா இடையே 2-ஆவது சோதனை ஓட்டம் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து, தில்லி - மும்பை இடையே மூன்று முறை சோதனை ஓட்டங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது நான்காவது மற்றும் இறுதி சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தில்லியில் இருந்து இயக்கப்படும் ராஜதானி ரயில், 16 மணி நேரத்தில் மும்பையை அடைகிறது. டால்கோ ரயில் பயன்பாட்டுக்கு வரும்போது, தில்லியிலிருந்து மும்பையை 12 மணி நேரத்தில் அடைந்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசத்தில் யுரேனியம் கண்டுபிடிப்பு | 13-Sep-2016 18:12

மத்திய பிரதேச மாநிலத்தில், உலகின் மிகவும் அரிதான அணு தாதுவான யுரேனியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஆய்வுப் பணிகளை துவக்க, அணு தாது இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

ம.பி., மாநிலத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின், பைதுால் பகுதியில் யுரேனியம் தாது இருப்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. ஹோசங்காபாத் மாவட் டம், சத்புரா புலிகள் சரணாலயத்துக்கு அருகில் அமைந்துள்ள, பைதுால் பகுதியில் ஆய்வு நடத்துவதற்கு, வடக்கு மண்டல வன பாதுகாப்பு துறை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, அந்த பகுதியில், 989 ஹெக்டேர் பரப்பளவில் யுரேனியம் எடுப்பதற்கு மாநில அரசின் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக, அணு தாது இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

யுரேனியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில், இந்தியா, 12வது இடத்தை பெற்றுள்ளது. உலகின் மொத்த யுரேனியம் இருப்பில், 3.54 சதவீத யுரேனியம் இந்தியாவில் உள்ளது. யுரேனியம், அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுகிறது.

புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை கௌரவிக்கும் வகையில் நினைவு தபால் தலை ஒன்றை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. | 07-Sep-2016 15:34 அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் வழங்கியதை அடுத்து, புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை கௌரவிக்கும் வகையில் நினைவு தபால் தலை ஒன்றை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. மும்பையில், பிஷப் Agnelo கிரேசியஸ், சகோதரி Rubella-வின் பங்கேற்ற நிகழ்ச்சியில், தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, இந்த தபால் தலையை வெளியிட்டார். இது ஓர் பெருமைப்படும் தருணம் என்றார் அவர். அன்னை தெரஸாவின் மனித குலத்திற்கான சேவைக்கு மரியாதையும், நன்றியும் தெரிவிக்கும் விதமாக, இந்த சிறப்பு தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சி அமைந்துள்ளது என்றார் அமைச்சர்.


QUIZ

தற்போதைய நிகழ்வுகள்