GK & Current Affairs in Tamil!

QUIZ

அனைத்து நடப்பு செய்திகள் ஐசிசி டி20 உலகக் கோப்பை: பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய பாகிஸ்தான் குழு இந்தியா வந்தது | 07-Mar-2016 01:38

புதுடெல்லி 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நாளை (8-ந் தேதி) தொடங்குகிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் இமாச்சலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை தர்மசாலாவில் நடத்தக்கூடாது என்று இமாச்சலபிரதேச முதல்-மந்திரி வீரபத்ரசிங் எதிர்ப்பு தெரிவித்தார். ‘பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் நினைவிடம் தர்மசாலா மைதானம் அருகில் உள்ளது. இங்கு பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தை நடத்துவது ராணுவ வீரர்களின் குடும்பத்தினரின் மனதை புண்படுத்தும் செயலாகும்’ என்று கருத்து தெரிவித்த அவர் இந்த போட்டிக்கு மாநில அரசால் பாதுகாப்பு அளிக்க இயலாது என்றும் அறிவித்தார். இதனையடுத்து, இந்தியாவில் விளையாடும் தங்கள் அணிக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தை பொறுத்தமட்டில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க தயார் என்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாகிஸ்தான் அணி கவலைப்பட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2 பேர் கொண்ட பாகிஸ்தான் குழுவினர் இன்று இந்தியா வந்துள்ளனர். இந்தக் குழு தர்மசாலாவில் நடைபெறவுள்ள மைதானத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் உஸ்மான் அன்வர் தலைமையிலான இந்தக் குழு இமாச்சல முதல்-மந்திரி வீரபத்ர சிங் மற்றும் அம்மாநில காவல்துறை அதிகாரிகளை சந்திக்க உள்ளது.

ரயில்வே லெவல் கிராசிங்குகளை அகற்றும் சேது பாரதம் திட்டம் | 07-Mar-2016 01:06

தேசிய நெடுஞ்சாலைகளில் ரயில்வே லெவல் கிராசிங்குகளை முற்றிலும் 2019ம் ஆண்டுக்குள் அகற்றும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். சேது பாரதம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், 50 ஆயிரம் கோடி முதலீட்டில் மேம்பாலங்கள், ரயில்வே கீழ் பாலங்கள் கட்டப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான, விரைவான பயணத்தை உறுதி செய்ய இந்த திட்டம் உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் 208 மேம்பாலங்கள், கீழ் பாலங்கள் 20 ஆயிரத்து 800 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ளன. மேலும், சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாயில் ஆயிரத்து 500 மேம்பாலங்கள், கீழ் பாலங்கள் புதுப்பிக்கப்பட இருக்கின்றன. டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இதற்கான விழாவில், அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

ரெயில் பயணிகள் ஏஜெண்டுகளிடம் டிக்கெட் எடுத்தால் எமர்ஜென்சி கோட்டா கிடையாது: தெற்கு ரெயில்வே அறிவிப்பு | 07-Mar-2016 01:05

சென்னை

ரெயில்களில் பயணம் செய்யும் சாதாரண மக்களும் அவசர காலங்களில் ‘எமர்ஜென்சி கோட்டா’வில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் எடுக்கும் முறை கடந்த 22–ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

உரிய காரணத்தை ஆவணங்களுடன் அந்தந்த கோட்டத்தில் உள்ள வணிக பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் அதனை ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஏஜெண்டுகளிடம் எடுக்கும் டிக்கெட்டுகளுக்கு ‘எமர்ஜென்சி கோட்டா’ கிடையாது என்று ரெயில்வே துறை அறிவித்துள்ளது. கவுண்டர்கள் மற்றும் ஆன்லைனில் எடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு ‘எமர்ஜென்சி கோட்டா’ பெறலாம்.

எமர்ஜென்சி கோட்டா ஒதுக்கீடு முறையில் சாதாரண டிக்கெட்டுகளை விட ‘தட்கலில்’ எடுக்கும் டிக்கெட்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் ரெயிலில் ஏறுவதற்கு பேட்டரி கார் மற்றும் வீல்சேர்கள் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் ஏற்கனவே உள்ளன.

பயணம் செய்யும் நாள் அன்று அவர்கள் அவசரமாக அதனை தேடி செல்லும் நிலை இருந்தது. தற்போது அவர்களின் வசதிக்காக சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையத்தில் உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

முதியோர், நோயாளிகள் பயணம் செய்யும் தேதி குறித்து 2 நாட்களுக்கு முன்பே 044–25354457 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் ரெயில் புறப்படுவதற்கு 45 நிமிடத்திற்கு முன்பு அவர்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும்.

இதையடுத்து வயதானவர்கள், நோயாளிகள் ரெயிலில் ஏறுவதற்கான ஏற்பாடுகளை ஊழியர்கள் செய்து வைப்பார்கள். இதனால் அவர்கள் அவசரமின்றி செல்லலாம்.

இந்த தகவலை தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப் பதிவு | 07-Mar-2016 01:01

தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக, மே 16ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என‌ தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களில் வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்குகிறது.

உக்ரைனில் ரஷிய தூதரகம் மீது தாக்குதல் | 07-Mar-2016 00:58

கிவ்

உக்ரைனில் ரஷிய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. முட்டை வீச்சும் நடந்தது.

உக்ரைனை சேர்ந்த பெண் விமானி நாடியா சாவ்சென்கோ (34) ரஷியாவில் கைது செய்யப்பட்டார். கிழக்கு உக்ரைனில் 2 ரஷிய பத்திரிகையாளர்களை கொலை செய்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். தன்னை விடுதலை செய்யும்படி வலியுறுத்தி ரஷிய சிறையில் உணவு மற்றும் தண்ணீர் அருந்தாமல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

எனவே அவரை விடுதலை செய்யக்கோரி உக்ரைன் தலைநகர் கிவ் நகரில் உள்ள ரஷிய தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. அதில் 1000–க்கும் மேற்பட்டோர் கும்பலாக திரண்டனர்.

அவர்கள் ரஷியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் ரஷிய தேசிய கொடியை தீயிட்டு கொளுத்தினர். ரஷிய தூதரகத்தின், மீது தீப்பந்தங்களையும், கற்களையும் வீசி தாக்கினர்.

இதனால் அங்கிருந்த கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொருங்கின. தூதரகம் மீது முட்டைகளும் வீசப்பட்டன. அங்கிருந்த கற்கள் சம்மட்டியால் அடித்து நொறுக்கப்பட்டன.

தூதரகத்தின் முன்பு ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின் உருவ பொம்மையை போராட்டக்காரர்கள் தூக்கில் தொங்க விட்டிருந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.

பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் சாம்பியன் | 06-Mar-2016 23:26

லக்னோ:சையது மோடி கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மின்டன் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.லக்னோவில், சையது மோடி கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனாவின் ஹியாங்கை எதிர் கொண்டார். முதல் செட்டை 21–13 என கைப்பற்றிய ஸ்ரீகாந்த், அடுத்த செட்டை 14–21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் அசத்திய ஸ்ரீகாந்த் 21–14 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், ஸ்ரீகாந்த் 21–13, 14–21, 21–14 என்ற செட் கணக்கில் வென்று, கோப்பை கைப்பற்றினார். இதன் மூலம், இத்தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த 2014, 15ல் பைனல் வரை முன்னேறி இருந்தார்.




QUIZ

தற்போதைய நிகழ்வுகள்