GK & Current Affairs in Tamil!

QUIZ

நடப்பு செய்திகள் - சட்டம் மற்றும் மசோதா திருநங்கைகள் இடஒதுக்கீடு மசோதா | 24-Aug-2016 19:08

திருநங்கைகள் இடஒதுக்கீடு மசோதா 2016-ஐ மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடி வரும் பல தன்னார்வ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இதுதொடர்பாக தில்லியில் உள்ள மத்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தில் சங்கமா, திருநங்கைகளுக்கான சமூக சட்ட அங்கீகார அமைப்பு உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடாளுமன்றத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2016-ஆம் ஆண்டின் திருநங்கைகள் இடஒதுக்கீடு மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்களை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது தொடர்பான எந்த அறிவுறுத்தல்களும், விதிமுறைகளும் முறையாக தெரிவிக்கப்படவில்லை.

அதேபோல், திருநங்கைகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை எவ்வாறு பெறுவது என்பது தொடர்பான உரிய விளக்கங்களும் இம்மசோதாவில் இடம்பெறவில்லை. அதேபோல், இந்த மசோதாவில் திருநங்கைகளை வரையறுக்கும் விதிமுறைகளும் ஏற்புடையதாக இல்லை.

மேலும், ஒருவரை திருநங்கை எனக் கண்டறிந்து சான்றளிப்பதற்காக மாவட்ட வாரியாக பிரத்யேகக் குழுக்கள் அமைக்கப்படும் என இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஷரத்தானது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும், அரசமைப்புச் சட்டத்தையும் மீறும் வகையில் உள்ளது.

முக்கியமாக, திருநங்கைகளுக்கு எதிராக அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், காவல்துறையினர் ஆகியோர் பிரயோகப்படுத்தும் வன்முறைகள் தொடர்பாக மசோதாவில் எந்த அம்சமும் இடம்பெறவில்லை.

2015-ஆம் ஆண்டின் திருநங்கைகள் இடஒதுக்கீடு மசோதாவை மேம்படுத்தும் வகையிலான ஷரத்துகளை உருவாக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவ்வாறு மறு சீரமைக்கப்பட்ட மசோதாவானது, திருநங்கைகளுக்கு கிடைக்க வேண்டிய சமூக நீதியைத் தொடர்ந்து மறுக்க வகை செய்யும் விதமாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய மசோதாவில் உள்ள இத்தகைய குறைபாடுகளை களையும் வகையில், இம்மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக 6 ஐ.ஐ.டி.,களை நிறுவ ஜனாதிபதி ஒப்புதல் | 12-Aug-2016 18:21

ஜம்மு, திருப்பதி உள்ளிட்ட ஆறு இடங்களில் ஐ.ஐ.டி., துவக்கவும், ஆந்திராவில் என்.ஐ.டி., துவக்கவும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜம்மு, திருப்பதி, கோவா, பாலக்காடு(கேரளா), தார்வார்ட்(கர்நாடகா), பிலாய்(சத்தீஸ்கர்) ஆகிய 6 இடங்களில் புதிதாக ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தைப் துவங்குவதற்கான, ஐ.ஐ.டி., கல்வி நிறுவன சட்டத் திருத்த மசோதா, கடந்த மாதம்(ஜூலை,25) லோக்சபாவிலும், ஆக., 2-ம் தேதி ராஜ்யசபாவிலும் நிறைவேறியது. இதையடுத்து, இச்சட்டத் திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் ஆந்திராவில் என்.ஐ.டி., துவக்குவதற்கான, என்.ஐ.டி., சட்டத் திருத்த மசோதாவுக்கும் பிரணாப் ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்பங்களை கையாளும் உரிமையைப் பெறுகிறது இந்தியா | 27-Jun-2016 10:44

அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள புதிய ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டுப் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை 99 சதவீதம் கையாளும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து, வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், \"பாதுகாப்புத் துறையில் பிரதான நட்பு நாடாக இந்தியா இணைக்கப்பட்டுள்ளது\' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அண்மையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்பங்களைக் கையாள இந்தியாவுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இது ஒரு தனித்துவமிக்க அந்தஸ்து ஆகும். எங்கள் பாரம்பரிய நட்பு நாடுகள் தவிர்த்து இந்தச் சலுகையை அனுபவிக்கும் ஒரே நாடு இந்தியாதான்.

இதற்கு முந்தைய, ஆயுதப் பரிமாற்ற ஒப்பந்தம் அல்லது வேறெந்தக் கொள்கைகளிலும் இந்தச் சலுகையை அளிப்பதற்கான வாசகம் இடம்பெறவில்லை. ஆனால், இந்தியாவுடன் பாதுகாப்புத் துறையில் அமெரிக்கா கொண்டுள்ள நட்புறவை தனித்துவமிக்க அந்தஸ்துடன் அடையாளம் காணும் வகையில் புதிய விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

அதிபர் ஒபாமா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர், அமெரிக்க ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு மையத்தின் அதிகாரிகள் ஆகியோரால் கடந்த 8 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்திய சார்பு கொள்கைகளுக்கு ஒப்புதலைப் பெற்று பலத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய அந்தஸ்து அமைந்துள்ளது.

இந்தப் புதிய அங்கீகாரத்தின் மூலம் இருதரப்பு பயன்பாடு கொண்ட ஏராளமான தொழில்நுட்பங்களைக் கையாள இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஏற்றுமதி தொடர்பான குறிப்பிட்ட ஒரு சதவீத தகவல் மட்டும் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்பட மாட்டாது. இந்தியா என்பதால் அந்த உரிமை மறுக்கப்படவில்லை. மாறாக, சர்வதேச அளவில் அமெரிக்கா கடைப்பிடிக்கும் கொள்கைகளின்படி, குறிப்பிட்ட அந்தத் தொழில்நுட்பங்களை உலகில் வேறெந்த நாட்டுடனும் நாங்கள் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்றார் அந்த அதிகாரி.

திவால் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் | 31-May-2016 08:37 நலிவடைந்த நிறுவனங்களின் பிரச்னைகளுக்கு 180 நாள்களில் தீர்வு காணும் வகையில் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள திவால் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.திவால் மசோதா, மக்களவையில் கடந்த மார்ச் 5-ஆம் தேதியும், மாநிலங்களவையில் கடந்த 11-ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.புதிய சட்டத்தின் சிறப்பம்சங்கள்: தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாத நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள் திவாலாவதைத் தடுக்க முடியும். கடன் கொடுத்தவர்களுக்கும், கடன் வாங்கிய நிறுவனங்களுக்கும் இடையே சுமுகத் தீர்வை எட்டுவதற்கு இந்தச் சட்டம் வழிவகை செய்துள்ளது.நலிவடைந்த நிறுவனங்கள் விண்ணப்பித்த 180 நாள்களில், அவற்றின் பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வை எட்ட முடியும். மேலும், திவால் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மோசடி செய்ய முயல்வோருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.சொத்து விவரங்களை மறைத்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். நிறுவனங்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான பணிகளை, உரிமம் பெற்ற \"திவால் அதிகாரிகள்\' கவனிப்பார்கள். அவர்கள், திவால் அதிகாரிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வகுப்பினர் மீது வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு சிறை மத்திய அரசு அறிவிப்பு | 18-Apr-2016 23:09

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மீது வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில், மொட்டை அடித்து அவமானப்படுத்துவது, ஆண்களுக்கு பாதி மீசையை மழிப்பது, ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது, பொது இடங்களில் குடிநீர் எடுப்பதை தடுப்பது, மனித மற்றும் விலங்குகளின் கழிவுகளை அள்ளவைப்பது, தேவதாசிப் பெண்களாக்குவது, பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பது, ஆடைகளை களைவது, சாதிப்பெயரை கூறி திட்டுவது போன்ற குற்றங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவற்றை தடுக்க போதிய சட்டங்கள் இருந்தாலும் அவை கடுமையானதாக இல்லை. இதையடுத்து, 1995–ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தை எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015 என்ற பெயரில் திருத்தம் செய்து சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த சட்டம் கடந்த ஆண்டு பாராளுமன்றத்திலும், டெல்லி மேல்–சபையிலும் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து மத்திய சமூக நீதி மற்றும் அமலாக்க அமைச்சக செயலாளர் தலைமையில் துரித நடவடிக்கை குழு ஒன்று கடந்த ஜனவரி மாதம் 22–ந்தேதி அமைக்கப்பட்டது.

இதற்கான உறுப்பினர்கள் சமூக நீதி மற்றும் அமலாக்க அமைச்சகம், உள்துறை, பழங்குடி விவகாரம், சட்டம் மற்றும் நீதித்துறை, எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வகுப்பினருக்கான தேசிய கமிஷன்கள், ஆந்திரா, பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்தும் இணைத்து கொள்ளப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, ‘எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வகுப்பினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தம் 2015’ கடந்த 14–ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்து இருப்பதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டு உள்ளது.




QUIZ

தற்போதைய நிகழ்வுகள்