GK & Current Affairs in Tamil!

QUIZ

நடப்பு செய்திகள் - கலை மற்றும் கலாச்சாரம் இந்திய இசை மற்றும் நடன விழா சிட்னியில் துவங்கியது | 21-Sep-2016 16:25

இந்தியாவின் உயர்ந்த, பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முதல் இந்திய இசை மற்றும் நடன விழா சிட்னியில் நேற்று துவங்கியது. பத்து வார காலத்திற்கு தொடர்ந்து நடைபெறவிருக்கும் இந்த விழாவை மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் ஷர்மா தொடக்கிவைத்தார்.

இந்திய – ஆஸ்திரேலியக் கலைஞர்கள் இணைந்து நடத்திய அற்புதமான நிகழ்சியுடன் விழா தொடங்கியது. இந்த விழா இரு நாடுகளுக்கும் பெருமை சேர்ப்பதாகக் கூறிய மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா, கடந்த பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் வலுவான தொடர்பை இரு நாட்டினரும் மகிழ்வுடன் அனுபவித்து வருவதாக கூறினார்.

2014 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் சிட்னி பயணத்தின் போது, இரு நாடுகளின் உறவைப் பலப்படுத்த இந்த முன்முயற்சி குறித்து அறிவிக்கப்பட்டதாக அந்நாட்டு அமைச்சர் ஜான் அஜக்கா கூறினார்.

உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துவரும் இந்தியாவுடனான பொருளாதார உறவுகள் மேலும் வலுவடையும் என்று அவர் கூறினார். இந்திய அரசின் முயற்சியான இந்த கலாச்சார திருவிழா, ஆஸ்திரேலிய அரசின் ஒத்துழைப்புடன், மெல்பர்ன், பெர்த், பிரிஸ்பேன், கான்பெரா மற்றும் அடிலைட் ஆகிய நகரங்களிலும் நடைபெறும்.

பிரபல ஜேம்ஸ் பாண்ட் படங்களை இயக்கிய கை ஹாமில்டன் காலமானார் | 22-May-2016 12:54

  ஜேம்ஸ் பாண்ட் படங்கள் சிலவற்றை இயக்கிய பிரிட்டிஷ் இயக்குநர் கை ஹாமில்டன் தனது 93ஆவது வயதில் காலமானார்.ஷான் கானரி நடித்த கோல்ட் ஃபிங்கர் மற்றும் டயமண்ட்ஸ் ஆர் ஃபார் எவர் ஆகிய படங்களை அவர் இயக்கியுள்ளார்.   பின்னர் ரோஜர் மூர் நடித்த லிவ் அண்ட் லெட் டை மற்றும் மேன் வித் தி கோல்டன் கன் ஆகியப் படங்களையும் இயக்கியுள்ள கை ஹாமில்டன் மத்தியதரை கடலில், ஸ்பெயினினுக்கு சொந்தமான மயோக்ரா தீவில் காலமானார்.தனது திரை வாழ்க்கையின் முற்பகுதியில், அவர் தர்ட் மேன் திரைப்படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியிருந்தார்.அந்தப் படத்தில் இயக்குநர் ஆர்ஸன் வெல்ஸுக்கு துணை இயக்குநராக இருந்தபோது, வியன்னா நகரில் இடம்பெறும் பரபரப்பு மிக்க காரில் துரத்தும் காட்சிகளை படமாக்கியிருந்தார். ஐஐடியில் சம்ஸ்கிருத மொழிப்பாடம் | 26-Apr-2016 11:48

இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) சம்ஸ்கிருத மொழிப்பாடத்தை கற்பிக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது: உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் பரிந்துரைகளை வழங்குமாறு முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், அறிவியல் தொடர்பான ஆயிரக்கணக்கான கருத்துகளும், சிந்தனைகளும் சம்ஸ்கிருத இலக்கியத்தில் செறிந்திருப்பதால் அந்த மொழிப்பாடத்தை உயர்கல்வி மாணவர்களுக்கு கற்பிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதன்படி, சம்ஸ்கிருத மொழியை கற்பிக்குமாறு இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் காலிப் பணியிடங்கள்: நாடு முழுவதும் செயல்படும் 16,600 மத்திய பல்கலைக்கழகங்களில் 5,292 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்தியப் பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி உரிமை பெற்றிருப்பதால் இந்தப் பணியிடங்களை நிரப்பும் பொறுப்பும் அவற்றையே சாரும் என ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

பழமையான பள்ளிவாசலில் பெண்களுக்கு அனுமதி | 26-Apr-2016 08:33

கேரள மாநிலம், கோட்டயத்தில் தாழத்தங்காடி என்ற இடத்தில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளிவாசலில் வழிபாடு மேற்கொள்ள முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கேரள மாநிலம், கோட்டயத்தில் தாழத்தங்காடி என்ற இடத்தில் மீனாச்சில் நதிக்கரையில் ஜும்மா மசூதி உள்ளது. இங்கு பெண்கள் வழிபாடு மேற்கொள்ள ஞாயிற்றுக்கிழமை அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, சிறந்த கட்டடக் கலையும், மர வேலைப்பாடுகளும் கொண்ட 1,000 ஆண்டுகள் பழமையான மசூதியில் வழிபாடு மேற்கொள்ள சுற்றுலாப் பயணிகள் உள்பட கேரளம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் அங்கு குவிந்தனர். வழிபாட்டுத் தலங்களில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வரும் நிலையில், ஜும்மா மசூதி நிர்வாகம் மேற்கண்ட முடிவை எடுத்துள்ளது. எங்கள் சமூகப் பெண்கள் அந்த பழம்பெரும் மசூதியை இதுவரை பார்வையிட்டதில்லை. அந்த புனித தலத்துக்குள் வழிபாடு நடத்த அவர்கள் விரும்பினர். அதனால் கடந்த 24-ஆம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை), மே மாதம் 8-ஆம் தேதியும் பெண்களை வழிபாடு நடத்துவதற்கு அனுமதிக்கலாம் என்று முடிவு செய்தோம். அதன்படி, அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டனர். எனினும், மசூதியில் வழிபடும் பெண்கள் பாரம்பரிய உடைகளை அணிந்திருக்க வேண்டும் என்றார் நவாப் முல்லாடம்.

நடிகர்கள் ஜிதேந்திரா, அனில் கபூருக்கு மகாராஷ்டிர அரசு விருதுகள் | 18-Apr-2016 19:25

மறைந்த நடிகர் ராஜ் கபூர் நினைவாக மகாராஷ்டிர அரசால் வழங்கப்படும் விருதுகளுக்கு பழம்பெரும் ஹிந்தி நடிகர் ஜிதேந்திரா, நடிகர் அனில் கபூர் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

74 வயதாகும் ஜிதேந்திராவுக்கு, ராஜ் கபூரின் வாழ்நாள் பங்களிப்பு விருதும், அனில் கபூருக்கு, சிறப்பு பங்களிப்பு விருதும் வழங்கப்படும். ஜிதேந்திராவுக்கு சான்றுப் பத்திரமும், நினைவுக் கோப்பை மற்றும் ரூ.5 லட்சம் பரிசும் அளிக்கப்படவுள்ளன. அனில் கபூருக்கு ரூ.3 லட்சம் பரிசுடன் நினைவுக் கோப்பை, சான்றிதழ் வழங்கப்படவுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிதேந்திரா, புகழ்பெற்ற \"ஹிம்மத்வாலா\', \"டோஃபா\', \"தரம் வீர்\' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக, ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்து வெளியான \"ஓம் சாந்தி ஓம்\' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அனில் கபூர், கடந்த 1979ஆம் ஆண்டில் வெளியான \"ஹமாரே துமாரே\' எனும் படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். டேனி பாயல் இயக்கத்தில் வெளியாகி ஆஸ்கர் விருதுகளை பெற்ற \"ஸ்லம்டாக் மில்லியனர்\' படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் புகழ் பெற்றார்.

தேசிய கலைகள் மைய அறக்கட்டளைக்கு பத்மா சுப்ரமணியம் நியமனம் | 16-Apr-2016 11:03 இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தின் அறக்கட்டளை உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தின் அறக்கட்டளையை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. அதன் புதிய தலைவராக, \"ஜனசத்தா\' ஹிந்தி நாளிதழின் முன்னாள் செய்தி ஆசிரியர் ராம் பகதூர் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தின் அறக்கட்டளை, மத்திய கலாசாரத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாகும். ராம் பகதூர் ராய் தவிர, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், பிரபல நடனக் கலைஞர் சோனல் மான்சிங், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, ஓவியக் கலைஞர் வாசுதேவ் காமத், மத்திய கலாசாரத் துறையின் செயலர் உள்ளிட்ட 19 பேர் இந்த அறக்கட்டளையில் உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள். மேலும், தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையத்தின் புதிய தலைவராக, பண்டைய இந்திய வரலாற்றுக் கல்வி நிலையத்தின் தலைவர் டாக்டர் சுஷ்மிதா பாண்டே நியமிக்கப்படுகிறார். இந்த நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கலைத் துறை பற்றிய ஆராய்ச்சி, கல்விச் சேவைகளை வழங்குவது ஆகியவற்றை மேற்கொள்வதற்காக, கடந்த 1987ஆம் ஆண்டில் இந்திரா கந்தி தேசிய கலைகள் மையம் தொடங்கப்பட்டது.  இதனிடையே, இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தின் அறக்கட்டளை மாற்றியமைக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா விளக்கமளித்தார்.


QUIZ

தற்போதைய நிகழ்வுகள்