GK & Current Affairs in Tamil!

QUIZ

நடப்பு செய்திகள் - மாநிலங்கள் இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை அறிமுகம் செய்தது உத்தரப் பிரதேச அரசு | 12-Oct-2016 18:25

உத்தரப் பிரதேச அரசு இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை இன்று அறிமுகம் செய்தது. உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. இந்த மாநிலத்தின் முதல்வராக அகிலேஷ் யாதவ் பதவி வகிக்கிறார்.அடுத்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இலவச ஸ்மார்ட் போன் திட்டமான :\"சமாஜ்வாதி ஸ்மார்போன் யோஜனா\" என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் இன்று அறிமுகப்படுத்தினார். பதினெட்டு வயது நிரம்பிய ,பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக இலவச ஸ்மார்ட் போனை பெற தகுதியானவர்கள்.மேலும் அக்டோபர் 10 முதல் நவம்பர் 10-ம் தேதிவரை இந்த திட்டத்தின் மூலமாக பயன் பெற விரும்புபவர்கள் இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். அடுத்த ஆண்டு தேர்தல் முடித்த பிறகு பதிவு செய்துள்ள அனைவருக்கும் புதிய இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் யுரேனியம் கண்டுபிடிப்பு | 13-Sep-2016 18:12

மத்திய பிரதேச மாநிலத்தில், உலகின் மிகவும் அரிதான அணு தாதுவான யுரேனியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஆய்வுப் பணிகளை துவக்க, அணு தாது இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

ம.பி., மாநிலத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின், பைதுால் பகுதியில் யுரேனியம் தாது இருப்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. ஹோசங்காபாத் மாவட் டம், சத்புரா புலிகள் சரணாலயத்துக்கு அருகில் அமைந்துள்ள, பைதுால் பகுதியில் ஆய்வு நடத்துவதற்கு, வடக்கு மண்டல வன பாதுகாப்பு துறை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, அந்த பகுதியில், 989 ஹெக்டேர் பரப்பளவில் யுரேனியம் எடுப்பதற்கு மாநில அரசின் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக, அணு தாது இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

யுரேனியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில், இந்தியா, 12வது இடத்தை பெற்றுள்ளது. உலகின் மொத்த யுரேனியம் இருப்பில், 3.54 சதவீத யுரேனியம் இந்தியாவில் உள்ளது. யுரேனியம், அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் வெங்காயம் இலவசம் | 26-Aug-2016 13:02

மத்தியப் பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வெங்காயம் அழுகிப் போவதைத் தடுக்கும் வகையில்,  பொது மக்களுக்கு இலவசமாக வெங்காயம் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

வெள்ளத்தினால் ரூ.100 கோடி மதிப்பிலான வெங்காயம் விளை நிலங்களிலேயே அழுகிப் போனதாலும், கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 3.25 லட்சம் குவிண்டால் வெங்காயம் கெட்டுப் போனதையும் அடுத்து இந்த முடிவை மாநில அரசு எடுத்துள்ளது.

வெங்காய உற்பத்தியில் முன்னிலையில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தில், மழைக் காலங்களில் அதனை சேமித்து வைக்க போதிய வசதி இல்லாததால், கிடங்குகளிலேயே வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டது.

இதனைத் தடுக்க, தற்போது கிடங்குகளில் இருக்கும் வெங்காயத்தை, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. குறைந்தது ஒரு கிலோ வெங்காயத்தை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து, போக்குவரத்து செலவையாவது மீட்க திட்டமிட்டுள்ளோம் என்றும் முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு: குஜராத் உயர் நீதிமன்றத்தின் தடை நீடிக்கும் | 24-Aug-2016 19:06

இதர பிரிவைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் குஜராத் அரசின் அவசரச் சட்டத்துக்கு அந்த மாநில உயர் நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதுதொடர்பாக குஜராத் அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகன் கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் இடம்பெற்ற அமர்வின் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, குஜராத் அரசின் சார்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோஹத்கி, குஜராத் அரசின் அவசரச் சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது செல்லாது என்று வாதிட்டார்.

பொதுப் பிரிவு மாணவர்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியம், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை இடைக்காலத் தடையை நீட்டிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து, இதர பிரிவைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் குஜராத் அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிரான வழக்கின் அடுத்த விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் என்றும், அடுத்த உத்தரவு வரும் வரை குஜராத் உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை தொடரும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

முன்னதாக, இதர பிரிவில் இடம்பெற்றுள்ள படேல் உள்ளிட்ட சமூகத்தினரைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது என்று குஜராத் அரசு கடந்த மே மாதம் 1-ஆம் தேதி அவசரச் சட்டம் பிறப்பித்தது. அதன்படி, ரூ.6 லட்சத்துக்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்டோருக்கு அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தெரிவித்தது.

ஆனால், அதை எதிர்த்து சிலர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அப்போது, இடஒதுக்கீட்டுக்கான மொத்த அளவு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளதால், மாநில அரசின் அவசரச் சட்டத்தை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

பிரிக்ஸ் மகளிர் 2 நாள் மாநாடு | 21-Aug-2016 17:30

பிரிக்ஸ்\' அமைப்பு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வரும் சனிக்கிழமை (ஆக.20) தொடங்க உள்ளது.

இந்த மாநாட்டில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் 42 பேர் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தொடக்கி வைக்கிறார்.

இந்த மாநாட்டில் பிரேஸில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் 5 பேர், ரஷியாவிலிருந்து 3 பேர், இந்தியாவிலிருந்து 28 பேர், சீனாவிலிருந்து 2 பேர், தென் ஆப்பிரிக்காவிலிருந்து 4 பேர் பங்கேற்கின்றனர்.

மாநாட்டில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பங்கேற்று தொடக்க உரை நிகழ்த்துவார். இரண்டாவது நாளின் நிகழ்ச்சி முடிவில் சுமித்ரா மகாஜன் நிறைவுரை நிகழ்த்த உள்ளார்.

குற்றவாளிகளின் மரபணு சேகரிக்கும் திட்டம்: ஆந்திரத்தில் தொடக்கம் | 21-Aug-2016 17:24

குற்றவாளிகளிடம் இருந்து மரபணு மாதிரிகளை சேகரித்து ஒரு தகவல் தொகுப்பை உருவாக்கும் திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக ஆந்திரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில முதல்வர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

குற்றவாளிகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து ஒரு தகவல் தொகுப்பை உருவாக்கும் திட்டம் முதல்முறையாக ஆந்திரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், குற்றவாளிகளின் ரத்த மாதிரிகள், உமிழ்நீர், வாயில் உள்ள செல்கள் உள்ளிட்ட மரபணு மாதிரிகளை சேகரிக்க அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒரு கருவி பயன்படுத்தப்படும்.

இந்தத் தகவல் தொகுப்பானது குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பதில் முக்கியப் பங்காற்றும். அத்துடன், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருபவர்களையும் விரைவாக கண்டறிய முடியும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திட்டம் குறித்து ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு கூறுகையில், \"குற்றங்கள் நடைபெறாத மாநிலமாக ஆந்திரத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்த அரசின் குறிக்கோள். அதற்கு, குற்றவாளிகளின் மரபணு தகவல் தொகுப்புத் திட்டம் உதவும்\' என்றார்.




QUIZ

தற்போதைய நிகழ்வுகள்